சக்தே இந்தியா
இணையத்தில் வலைப்பதிவர்களால் ஆகா ஓகோ என்று புகழப்பட்ட "சக்தே இந்தியா" படத்தைப் பார்க்க முடிவு செய்தேன். யாஷ் சோப்ரா மற்றும் ஷாருக் கான் கூட்டணி வயிற்றைக் கலக்கியது. "சோனியே" என்று கடவாச்சவுத் அன்று மல்டிகலர் துணிமணியில் டண்டணக்கா டண்டணக்கா என்று ஆடுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் ஆச்சரியம், படம் வெகு நேர்த்தியாக நெய்யப்பட்டு, மிகவும் ரசிக்கக் கூடியதாக இருந்தது.
விளையாட்டை மையமாய் வைத்த படங்கள் ஹாலிவுட்டில் வருடத்திற்கு இரண்டு என்று வருவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இந்தித் திரைப்படங்களில், எனக்குத் தெரிந்து "லகான்" மற்றும் "இக்பால்" தவிர வேறு எதுவும் வந்ததாகத் தெரியவில்லை. தமிழில் "சென்னை 600028" ('கில்லி' எல்லாம் இதில் சேர்த்தியில்லை).
"சக்தே இந்தியா" இதுவரை எவரும் சீந்தாத மகளிர் ஹாக்கியைப் பற்றியது. அப்படிப்பட்ட ஒரு அணி எப்படி உலகக்கோப்பை வரை போகிறது, அதற்கு அந்த அணியில் உள்ள பெண்களும், அவர்களது பயிற்சியாளரும் எப்படிப் பாடுபடுகிறார்கள் என்பதுதான் கதை.
ஒரு நல்ல சினிமாவிற்கான முக்கியமான லட்சணங்கள் "சக்தே இந்தியா"வில் இருக்கிறது. முதற்பாதியில் அருமையான setup. ஒரு பக்கத்தில், தன்மானத்தை இழந்த ஒரு முன்னாள் கேப்டன். தன்னை மீண்டும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். மறுபக்கத்தில், மூட்டை அவிழ்ந்த நெல்லிக்காய்களைப் போல் திசைக்கு ஒரு பக்கமாக வெவ்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருக்கும் ஹாக்கி வீராங்கனைகள்.
16 பெண்கள், ஒரு உதவிப்பயிற்சியாளர் மற்றும் பயிற்சியாளர் என்று இத்தனை கதாபாத்திரங்களா? விக்ரமன் படம் போல கும்பலாக வந்து குழப்பப் போகிறார்கள் என்று நினைத்தால், மணிமணியாய் பாத்திரப் படைப்பு. படம் முடியும் போது ஒவ்வொரு பெண்ணும் மனதில் பதிகிறார்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வெகு சிரத்தையாக செதுக்கியிருக்கிறார் இயக்குனர். கடைசி வரை எதிர்மறையாய் வந்து அசத்தும் "பிந்தியா நாயக்" (சில்பா). எப்போது வேண்டுமானாலும் "பளார்" என்று கன்னத்தில் அறையத் தயாராய் உள்ள கோபத்தோடு பஞ்சாபிலிருந்து "பல்பீர்" (டானியா); ஜார்கண்டிலிருந்து "சொய்முய்" என்று பட்டியல் நீள்கிறது. இதில் வியப்பான விஷயம் என்னவென்றால் பதினாறு பெண்களும் சினிமாவுக்குப் புதிது, ஹாக்கிக்கும் புதிது. யாரும் நடிப்பதாகவே படவில்லை. அவரவர்கள் அக்கதாபாத்திரங்களாக வாழ்ந்து விட்டுப் போகிறார்கள்.
இதற்கு எல்லாம் மகுடம் வைத்தாற்போல் ஷாருக்! நான் இதுவரைப் பார்த்த ஷாருக்கா இது? ஒரு நடுவயது ஹாக்கி வீரராய், கண்களில் மெலிதான சோகத்துடன், தனது இழந்த பெயரை மீட்டெடுக்கத் துடிக்கும் சராசரி மனிதனாய் - கலக்கி எடுக்கிறார் ஷாருக்.
இயக்குனர் ஷிமித் அமின்னின் "அப்தக் சபன்" என்ற அருமையான படத்திற்க்குப் பிறகு "சக்தே இந்தியா" ஒரு முற்றிலும் மாறுபட்ட முயற்சி. பாட்டு, சண்டை என்று எந்த speed-breaker-ரும் இல்லாமல் துணிவாக திரைக்கதையை நகர்த்திச் சென்ற இயக்குனருக்கு ஒரு ஷொட்டு. படத்தில் வசனங்கள் பல இடங்களில் "ஓ" போட வைக்கின்றன. நேத்ரா ரெட்டி "தெலுங்கு" என்று சொன்ன பிறகும் "ஓ தமிழா, இரண்டும் ஒன்று தானே" என்று வெறுப்பேற்றும் முதியவரிடம் "தமிழுக்கும் தெலுங்கிற்க்உம் உள்ள நெருக்கம், பிஹாரிக்கும் மராட்டிக்கும் உள்ள நெருக்கம்" என்று சொல்லி குட்டு வைக்கும் வசனம் அருமை.
இயக்குனரின் மனதில் இருக்கும் எண்ணங்களை அழகாக திரையில் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுதிப் சட்டர்ஜி. ஆஸ்திரேலியாவில் நடக்கும் ஒவ்வொரு மேட்சிலும் நம் பல்சை எகிர வைக்கின்றது அவரின் கைவண்ணம்.
இசையும் படத்தொகுப்பும் படத்தின் வேகத்திற்குப் பக்கபலம்.
சென்ற வாரம் சன் டிவியில் "சக்தே இந்தியா"விற்குப் பின்னர் ஹாக்கி மட்டை விற்பனை மிகவும் அதிகரித்திருப்பதாகச் செய்தி பார்த்தென். என்னைப் போல பலர் மனதை இப்படம் கவர்ந்திருக்கின்றது என்பதற்கு இது ஒரு சான்று.
அவசியம் பாருங்கள்.