வெயில்
ஒரு கண்ணாடி ஜன்னல் வழியே, இன்னொரு உலகத்தையும் அதில் வாழும் மனிதர்களையும் பக்கத்தில் பார்க்கும் அனுபவமாய் சமீபத்தில் வந்த “ஆட்டோகிராப்", ”காதல்" பட வரிசையில் இப்பொழுது “வெயில்".
சிறுவயதில் நடக்கின்ற ஒரு சம்பவம் எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு அவனது கடைசிக்கட்டம் வரைத் துரத்தி, அவன் வாழ்ந்த வாழ்க்கையையே தொலைக்கச் செய்கிறது என்பதை நெஞ்சில் அறைவது போல் சொல்கிறது வசந்தபாலனின் இந்தப் படைப்பு.
இரண்டு பிள்ளைகளில் ஒருவன் எது செய்தாலும் தவறாகப் போகிறது; அடுத்தவன் எது செய்தாலும் நன்றாக அமைகிறது. இவ்விரண்டு வாழ்க்கைகளின் அனுபவங்களையும் வெகு லாவகமாய் திரைக்கதை ஆக்கி இருக்கிறார் இயக்குனர்.
முருகேசனாய் பசுபதியும், கதிராய் பரத்தும் அவர்களது வேலைகளை மிக நேர்த்தியாய் கையாண்டிருகிறார்கள். ”நாயெல்லாத்தையும் தொலைச்சிட்டேன், நான் ஒரு வெறும்பயல்" என்று உடைவாதாகட்டும், அல்லது எதிர்வீட்டு தங்கத்தைக் கவர ‘ஜானி' ஸ்டைல் தொங்கு மீசையைச் சீவுவதாகட்டும், தனது கதாபாத்திரத்தின் வீச்சை முழுவதுமாக உணர்ந்து நடித்திருக்கிறார் பசுபதி. விருதுநகரில் தனது தொழிலில் வெல்லத் துடிக்கிற ஒரு துடிப்பான இளைஞனை, ஒரு பாசமுள்ள தம்பியைக் கண்முன் நிறுத்துகிறார் பரத்.
படத்தின் நிஜக் கதாநாயகன் இயக்குனர் வசந்தபாலன். படம் ஆரம்பித்த சில தருணங்களிலேயே, நமது இளமைக் கால நினைவுகள் நம்மை சட்சட் என்று தாக்குகிறன. கையில் பம்பரம் விடுவதும், வேப்பங்கொட்டைத் தோலை கையில் வைத்து உடைப்பதும் என்று, நம் வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களை வெகு ரசனையாய் பதிவாக்கி இருக்கிறார் இயக்குனர்.
முருகேசனின் டூரிங்டாக்கீஸ் வேலை, அதன் சிறுசிறு சந்தோஷங்கள் ஆகியவற்றைக் காண்பிக்கும் காட்சிகளில் ‘Cinema paradiso’ படத்தின் பாதிப்பு தெரிகிறது. முருகேசனின் வாழ்க்கையின் பல கட்டங்களை காலவரிசைப்படி காட்டும் யுக்தியாய் அந்த அரங்கத்தில் வரும் எம்.ஜி.அர் படம், பிறகு ரஜினியின் ஜானி என்று காட்டி இருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனத்திற்கு ஒரு உதாரணம். விருதுநகரில் கதிரின் சிறுவிளம்பரத் தொழிலும், அவனது நண்பர்களும், மீனாட்சியுடன் காதல் என்று விரியும் காட்சிகளும் ஒரு ஜாலி கலாட்டா.
புதிய இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷின் இசையும், மதி மற்றும் அழகப்ப்பனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாய் அமைகிறது.
கதையில் ஒட்டாமல் வருகிற ஒரு விஷயம், அதீத வன்முறையுடன் வரும் படத்தின் இறுதிக் காட்சிகள். இன்னும் சிறிது யோசித்திருந்தால், சொன்ன கதைக்கு நேர்மையுடனும், அதே நேரத்தில் அழுத்தமாயும் ஒரு முடிவை இயக்குனர் கொடுத்திருக்கலாம்.
ஒரு ‘loser’ கதையை தைரியமாய் தயாரித்த “இயக்குனர்" சங்கருக்கு ஒரு ‘ஷொட்டு' கொடுக்கலாம். ‘காதல்', ‘இம்சை அரசன்', ‘வெயில்' என்று வரிசையாய் வெகுதரமான படைப்புகள் கொடுத்ததற்கு, ‘சிவாஜி' படத்தின் டைட்டில் கார்டில், ‘தயாரிப்பாளர்' சங்கர் என்று பெருமையாய்ப் போட்டுக் கொள்ளலாம்!
‘வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையில் சகஜம்' என்ற சுலபமான வேதாந்தத்துடன் சமூகம் சாதாரண வாழ்க்கை வாழ்கிறது. வரும் சவால்களை எதிர்த்துப் போராடி வெற்றி மீது வெற்றி ஈட்டும் மிகை வாழ்க்கையை திரைக்கதாநாயகர்கள் வாழ்கின்றனர். இவை இரண்டுக்கும் மாறாக தோல்வி மீது தோல்விகளை எதிர்கொள்ளும் ஒரு வாழ்க்கையைப் பதிவு செய்கிறது ‘வெயில்'. படத்தின் ஒரு கட்டத்தில் முருகேசன் அனைத்தையும் இழந்து விட்டு தனது குடும்பத்திடம் திரும்பி வந்து விடுகிறான். அவனை ஏற்க மறுக்கும் குடும்பத்தை எதிர்கொள்ளத் தெரியாது திகைக்கிறான். அப்பொழுது, படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த என் மனைவி, ”அதான் வந்து சேர்ந்திட்டானில்ல, இன்னும் ஏன் வெட்டியா ஊரச் சுத்திக்கிட்டு இருக்கான்? ஒழுங்கா ஒரு வேலையைப் பார்க்க வேண்டியது தானே" என்றாள்.
யோசித்துப் பார்த்தில் அது சாத்தியமா என்ற கேள்வி எழுதிறது. வாழ்க்கையில் திரும்பத் திரும்பத் தோல்விகளையும், சோதனைகளையும் சந்திக்கிற மனிதன், அவற்றையே சிலுவை போல் சுமந்து திரிகிற மனிதன், எப்படி வெல்வது என்ற சிந்தனையே அற்றுப் போவானோ என்று தோன்றுகிறது. எத்தனை முறை விழுந்தபின் எழுந்திருக்க மனமற்றுப் போகும்? ‘வெயில்’ இந்தக் கேள்வியைப் பற்றி யோசிக்கிறது; நம்மை யோசிக்க வைக்கிறது.